பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மர படகுக்காக கடற்படையின் உதவி

ஹம்பாந்தோட்டை பகுதிக்கு அப்பால் தெற்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மரப் படகொன்றை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வர 2022 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

2022 மார்ச் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மாலைதீவு நோக்கி பயணித்த வெளிநாட்டு பாய்மரப்படகான ‘Adamant II’ படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் கிடைத்தது. குறித்த தகவலின் பேரில், பாதிக்கப்பட்ட படகை கரைக்குக் கொண்டு வருவதற்காக கடற்படை 4ஆவது துரித தாக்குதல் ரோந்துப் படைப் பிரிவுக்கு சொந்தமான P422 விரைவுத் தாக்குதல் படகொன்றை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து அனுப்பியது.

அதன்படி, 2022 மார்ச் மாதம் 22 ஆம் திகதி கடற்படையின் விரைவுத் தாக்குதல் படகு மூலம் பாய்மரப் படகு மற்றும் இரண்டு (02) வெளிநாட்டினரை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன் அவர்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியர்கள் என கண்டறியப்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பாய்மரப்படகை பழுதுபார்ப்பதற்காக பாய்மரப்படகின் உள்ளூர் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கையில் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் பாதிக்கப்பட்ட கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்திற்கான நிவாரண உதவிகளை வழங்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.