2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முலம் 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியுள்ளது

தேசத்தின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நனவாக்குவதில் இலங்கை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்வாறாக, 2021 ஆம் ஆண்டில் மாத்திரம், கடற்படையினர் இலங்கை கடற்பகுதியில் மற்றும் சர்வதேச கடல்பகுதியில் மேற்கொண்டுள்ள வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது 15.86 பில்லியன் ரூபா வீதிப் பெறுமதியான போதைப் பொருட்களை கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க தீவைச் சுற்றியுள்ள கரையோரக் கடற்பரப்பில் மட்டுமன்றி சர்வதேச கடற்பரப்பிலும் உள்ள ஏனைய புலனாய்வுப் பிரிவினருடனும் விழிப்புடன் கூடிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் 2021 ஆம் ஆண்டில் இவ்வாரான பெருமளவிலான போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியுள்ளது.

இதன்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கை கடற்பரப்பில் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட 74 சுற்றிவளைப்புகளின் போது 1268 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்த 119 உள்ளூர் சந்தேக நபர்களும் 22 வெளிநாட்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும்,151 சுற்றிவளைப்புகளின் போது 7095 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 186 உள்ளூர் மற்றும் 07 வெளிநாட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

மேலும், 158 கிலோவுக்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (Crystal Methamphetamine) அல்லது ஐஸ் போதைப்பொருளுடன் 73 சந்தர்ப்பங்களில் 98 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட 16 நடவடிக்கைகளின் போது 69 கிலோவுக்கும் அதிகமான உள்ளூர் கஞ்சாவுடன் 27 சந்தேக நபர்களையும் 88 கிலோவுக்கும் அதிகமான ஹஷிஸ் உடன் மேலும் 09 உள்ளூர் சந்தேக நபர்களையும் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் ஒருங்கிணைப்பு மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் வருங்கால சந்ததியை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதுக்கான அரசின் முயற்சிகளை வெற்றியடையச் செய்யும் முயற்சிக்கு கடற்படை இந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை 2022 ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளும்.