26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் 2021 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள கோட்டாபய முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2021 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 89 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூ.26 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

இந்த முழு நடவடிக்கையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்றதுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விஸ்வமடு தெற்கு, உடையார்கட்டு, உடையார்கட்டு தெற்கு மற்றும் மூங்கிலாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.