ரூபா 06 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் ஊருமலை கடலோரப் பகுதியில் 2021 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் தலைமன்னார், ஊருமலை கடலோரப் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்தனர். அப்போது குறித்த படகில் மீன்பிடி வலையால் மறைத்து வைக்கப்பட்ட 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) கண்டுபிடிக்கப்பட்டன. டிங்கி படகு மற்றும் ஐஸ் போதைபொருளுடன் டிங்கி படகில் இருந்த மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு சந்தேகநபரும் (01) கைது செய்யப்பட்டார்.

கடற்படை கைப்பற்றிய இந்த ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூபா. 06 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 33 வயது வரையிலான ஊருமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஐஸ் போதைப்பொருள் மற்றும் டிங்கி படகுடன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.