'நீர்க்காக கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி IX - 2018’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 26) நிறைவுற்றது. இப்பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்துள்ளார்.

இங்கு இடம்பெற்ற இறுதிக்கட்ட கள முனை போர் பயிற்சி நடவடிக்கைகளின்போது, இராணுவ வீரர்கள் வான், கடல் மற்றும் தரைவழி ஊடக ஒருங்கிணைந்து பன்முனை தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் எதிரிகளின் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் முறையிலான செயற்பாடுகளை காட்சிப்படுத்தினர். இப்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இராணுவ கொமாண்டோ படைவீரர்கள் மற்றும் விஷேட படை வீரர்கள் உட்பட கடற்படை கப்பல்கள், எம்ஐ 24 மற்றும் மிக் ரக போர் விமானங்கள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டன.

கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இம்மாதம் (செப்டெம்பர்) 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கள முனை போர் பயிற்சி நடவடிக்கைகளில் 2500 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள், 200 விமானப்படை வீரர்கள் உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த 64 வெளிநாட்டு அவதானிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இப்பயிற்சி இறுதி நிகழ்வில் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் செய்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இவ்வாறான பயிற்சிகளினூடாக மேலும் அறிவை மேம்படுத்திக்கொள்வதுடன், இலங்கை இராணுவத்தின் வளர்ச்சிக்கு இவ்வாறான பயிற்சிகள் மேலும் ஊக்கமளிக்கும் என்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஒன்பதாவது கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை தளபதி, இலங்கை விமானப்பாடை அதிகாரிகளின் பிரதானி, அரச அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் இப்பயிற்சிக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் இன்று (செப்டெம்பர், 27) இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கத.