கடல் மார்க்கமாக 154. 6 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்திய ஐந்து பேரை கடற்படையினரால் கைது.
 

காங்கேசந்துறைக்கு வடமேற்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த டிங்கி ரக படகொன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தபோதே அதற்குள்ளிருந்து 154.6 கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்த சோதனையின்போது இந்த கஞ்சாவை பெற்றுக்கொள்வதற்காக உடுத்துறை கடலில் மேலுமொரு டிங்கி படகுடன் இருவர் காத்திருந்தமை கண்டறியப்பட்டது. கடற்படையினர் அப்படகை கைப்பற்றியதுடன் அதிலிருந்த சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

கடற்படையினர் ஐந்து சந்தேகநபர்கள், இரண்டு டிங்கி ரக படகுகள் மற்றும் 154.6 கிலோ கேரள கஞ்சா என்பவற்றை காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை கடற்படையினரால் வடக்கு கடலிலிருந்து சுமார் 700 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.