ஜபானிய-இலங்கை கடல் ஒத்துழைப்பு கடல் பாதுகாப்பு அபிவிருத்திற்காக 1.8 பில்லியன் யென்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் பிரதமர் அதிமேதகு சிங்சோ அபே அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் இரு இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு திறன் மேம்படுத்தல் திட்டங்களின் மேம்பாட்டுக்கான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கொள்கைசார்ந்த உரையாடலின் முதற்கட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையையும் கடந்த 2016 ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெற்ற கடல்மார்க்கப் பாதுகாப்பு, கடல்சார் பிரச்சினைகள் குறித்த இலங்கை ஜப்பான் உரையாடலையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான கடல் மார்க்க கூட்டுறவைப் பலப்படுத்தும்வகையில் இரண்டு கண்காணிப்பு கப்பல்களை வழங்குவது உட்பட கடல்மார்க்க இயல்திறன் மேம்பாட்டுக்கான (சுமார் 1.8 பில்லியன் யென் பெறுமதியான) கருத்திட்டத்தின் உறுதியான முன்னேற்றத்தின் அவசியத்தையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், ஜப்பானிய கடல்சார் சுயபாதுகாப்புப் படை மற்றும் ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படைகளின் கப்பல்களின் வருகையானது இரு நாடுகளுக்கிடையில் நிலவும் ஸ்திரமான கடல்சார் ஒத்துழைப்புக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இதன் பிரகாரம் 2009ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஜப்பானிய கடல்சார் சுயபாதுகாப்புப் படை மற்றும் ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களின் 55 விஜயங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் ஜப்பான் அரசாங்கமானது எண்ணெய் கசிவு தடுப்பு, கடல்சார் அனர்த்தங்ளைத் தடுத்தல் , சட்ட அமுலாக்கம், சமுத்திரப்பிராந்தியத்தில் தேடலின் மூலம் மீட்டல் போன்ற நடவடிக்கைகளில் ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை மூலம் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றன.