இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த மூன்று இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கைக் கடற்பரப்பில் 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய படகுகளுடன் 11 இந்திய மீனவர்களை கைது செய்தனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளையின் 4 வது விரைவு தாக்குதல் படையணியின் விரைவு தாக்குதல் படகுகளை பயன்படுத்தி யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான bottom trawling முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை 03 இந்திய மின்பிடி படகுகளுடன் கைப்பற்றப்பட்டன.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொண்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கும் இலங்கையின் மீன்வளம் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.