ஐஸ் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று மாலை (2022 ஜனவரி 19) தலைமன்னார் ஊறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 485 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதுக்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கடற்படை வீரர்கள் இன்று மாலை (2022 ஜனவரி 19) தலைமன்னார் ஊறுமலை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அப்போது கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது டிங்கி படகில் பிளாஸ்டிக் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 485 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) மீட்கப்பட்டது. போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும் டிங்கி படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு 04 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய ஊருமலை பகுதியைச் சேர்ந்தவராவார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் டிங்கி படகுகளுடன் சந்தேகநபர் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளார். இதேவேளை, இந்த கடத்தல் முயற்சியுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களைத் தேடி தலைமன்னார் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை அப்பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.