வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 25) பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நாட்டின் பல பாகங்களில் நீண்டகால சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, சுகாதார அமைச்சு மற்றும் நலன் விரும்பிகளின் அனுசரணையின் கீழ் கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஆளணியினைக் கொண்டு நாடு முழுவதும் இதுவரை சுமார் 880 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடற்படை நிறுவியுள்ளது.

இந்த நிகழ்வில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன கலந்துகொண்டு குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பாவனைக்காக கையளித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்கள் கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.