வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பான பாடநெறி வெற்றிகரமாக நிறைவு
 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கடற்படை வீரர்களுக்காக இலங்கை கடற்படையின் சிறப்பு படகு ஸ்குட்ரான் பிரிவினால் நடாத்தப்பட்ட கப்பல்களில் சென்று தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS) தொடர்பான 3 ஆவது பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்ட இப் பாடநெறி இம்மாதம் (நவம்பர்) 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிழக்கின் துறைமுக நகரமான திருகோணமலையின் சிறப்பு படகு ஸ்குட்ரான் பயிற்சிப் பாடசாலை தலைமையகத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில் 08 இந்தோனேஷிய சுங்கத்திணைக்கள் அதிகாரிகள், 08 மலேசியா கடலோர காவல் படையினர் உட்பட பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல்சார் காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையிலிருந்து இரண்டு படையினர் வீதமாக இருபது பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இப்பாடநெறியின்போது, போதைவஸ்துகளை அடையாளம் கண்டுகொள்ளல், அதனை பரிமாற்றும் முறைகள் தொடர்பாக திட்டமிடல் மற்றும் அதனை தயார்செய்தல் ஆகிய பிராதான விடயங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டன.

இப்பாடநெறியின் நிறைவு நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு திரு.அகிற சுகியாமா, இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் பியால் டீ சில்வா, உலகளாவிய கடல்சார் குற்றங்கள் திட்டத்தின் தலைவர், திரு. அலன் கோல் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.